Thursday, August 19, 2010

கடவுளிடம் சில கேள்விகள்..

இன்று காலை..
என் போர்களம் செல்ல
ஆயத்தமாகி,ரயில் பயணத்தில் நான்..

அங்கே,
இருக்கைகளுக்காக காத்திருக்கும் கண்கள் சில..
காதலுக்கு கடன் கொடுத்த காதலர்கள் கண்கள் சில..
செய்தித்தாளில் தொலைத்த் கண்கள் சில..
உறக்கத்தில் ஒளிந்து கொண்ட கண்கள் சில..

சிறகு விரித்து பறந்த மின்சார ரயிலின்,
காதை செல்லமாய் திருகி நிறுத்தினார் அதன் ஓட்டுனர்..

பூக்களுக்கு போட்டியாய் பிஞ்சு பாதங்களும்,
வாழ்வோடு போராடும் சில இளைஞர் பாதங்களும்,
அனுபவம் சொல்லும் முதிர்ந்த பாதங்களும்,
கரை சேர்ந்தன...

மீண்டும் பறந்தது மின்சார ரயில்..
சட்டென்று ஒர் ஓசை..
ஓசை வந்த திசை நோக்கி எல்லோர் கண்களும்..

தலையில் சிவப்பு தொப்பி,
அழகாய் ஒரு முழுகால் சட்டை,
பால்குடி மாறா உதடுகள்..
பார்த்தால் அள்ளி அணைக்க தோன்றும்
ஒர் 4 வயது சிறுவன்..

அவன் எதிர் திசையில்,,
உலகம் அறியா ஓர் முகம்..
மழலை மொழி மறக்காத உதடுகள்..
பொம்மைகளோடு மட்டும் சினேகம் வைத்துக்
கொள்ள துடிக்கும் வயதில் ஒர் சிறு பெண்..
அவன் உடன் பிறந்தவளாய் இருக்கக் கூடும்..

அவள் அன்னையின் தாளத்திற்க்கு ஏற்ப,
உடலை அசைத்தான் அச்சிறுவன்..
தன் வாழ்வை போல் தன்னையும் ஓர்
வளையத்துக்குள் அடைத்துக் கொண்டாள் அச்சிறுமி..
அதிலிருந்து லாவகமாய் வளைந்து வெளியேறவும் செய்தாள்..
அவள் வயதிற்க்கு ஒத்தாத வித்தைகள் பல செய்தாள்..

தாளம் நின்றது..
அரங்கேற்றமும் முடிந்தது..
எழுதுகோல் பிடிக்க வேண்டிய அவள் விரல்கள்,
பிச்சை பாத்திரம் தொட்டது..
அ ஆ வன்னா உச்சரிக்க வேண்டிய அவன் உதடுகள்,
யாசகம் கேட்கத் தொடங்கியது..

சிலர் உடல்களை தொட்டு,
அவர்கள் மனம் தொட முயற்ச்சித்தனர் அவ்விருவர்..
வேடிக்கை பார்த்த சிலர்,
கடலில் முத்தெடுப்பது போல் தேடிப் பிடித்து
ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் நாணயமென இடத்தொடங்கினர்..
சில்லரை சத்தங்கள் அவர்கள் அன்னையின்
காதுகளை குளிர்வித்தது..

வாழ்வில் முன்னேற ஆயிரம் வழிகள் என
ஆயிரம் புத்தகங்கள்..
குழந்தைகளை பயன்படுத்தாமல் பிச்சை எடுக்க ஆயிரம் வழிகள் என
யாரேனும் புத்தகம் எழுத யாரும் இல்லையா??

ஒரு தொழில் செய்து என் சம்பாத்தியம்
என் தந்தைக்கு உதவி செய்ய
24 ஆண்டுகள் ஆயின,
அதை 3 வயதில் செய்ய முனையும் இவனை,
படைத்த கயவன் யார்?

ஒர் உயிர் கொடுக்க மறந்தோ,மறுத்தோ
ஓராயிரம் பெற்றோர்கள் இங்கிருக்க,
அவள் குழ்ந்தையின் பசி தீர்க்க முடியாத
இந்த அன்னைக்கு கொடுக்காமல் மறந்திருக்கலாம் அல்லவா?

இப்படி வாழ கற்றுக் கொடுத்தவன் எவனோ,
அவனே அவர்களுக்கு மாறி வாழ,மாற்றி வாழ
கற்றுக் கொடுத்தால் என்ன?

ஒர் இரவில் செய்த குற்றத்திற்காக,
இரு வாழ்வை தூக்கிலிடும்
தீர்ப்பைச் சொல்லியவன் யார்?

எனக்குள் எழுந்த கேள்விகள்,
அவ்வன்னைக்கும் எழுந்தால் என்ன?

இப்படியாய் ஆயிரம் கேள்விகள் எழ தொடங்கிய நேரத்தில்,
ஒர் குறவ பெண் கண்ணில் தென்பட்டால் கையில் ஒர் குழந்தையுடன்..
எதோ ஒர் பொருளை விற்று பணம் ஈட்டிக் கொண்டிருக்க,
இவ்விரு அன்னைக்கும் என்ன வித்தியாசம் என மற்றும் ஓர் கேள்வி எழ,
என் நிறுத்தம் வந்தது..

கூட்டத்தில் மறைந்து தொலைந்தது,
என் கேள்விகளும்..
என் கால்களும்..

No comments: