Sunday, July 15, 2007

நிலாச் சோறு

அறியா வயதில் ,
அன்னை மொழி மட்டும் விளங்கும்
பருவத்தில் ,
மாதக்கணக்கில் வயிற்றில் சுமந்தவள் ,
இறக்க மனமில்லாமல் ,
வருடங்களாய் இடுப்பில் சுமந்த காலத்தில் ,
இரவு நிலவை ,பொம்மை பொருளாய்க் காட்டி ,
சோறு ஊட்டுவாள் ..

அவள் சொல்லும்
பாட்டி வடை சுட்ட கதையும் ,
நிலா கதையும் ,
பூச்சாண்டி கதையும் அன்று எனக்கு
ராமயணம் ,மகாபாரதம்..

விடிந்த பொழுதில்
நிலவில்லையேல்
ஊண் உண்ண மறுக்கும் என்னை
சமாதானப்படுத்தும் பொறுமை
கடலுடன் போட்டி போடும் ..

முகம் அறிந்த வயதில் ,
வழிந்தோடும் உறக்கத்தை
மெல்ல விலக்கி விட்டு ,
காலை நேர அலாரமாய் ஒரு முத்தம் தந்து என்னை எழுப்புவாய்..

உன் முகம் மறையும் தருணத்தில்
வெளியேரும் கண்ணீரை
கையில் ஏந்தி ,
"அம்மா மதியம் சாப்பாடு கொண்டு வரேன் டா" என
வார்த்தை கைக்குட்டையை கொடுப்பாய்..

எனக்க்காய் நட்ட நடு வெயிலில்
சாப்பாட்டுக் கூடையுடன்
காத்து நிற்ப்பாய்..
மதிய வேளையில் தான் உணவு உண்ண வேண்டும் என்னும்
பழக்கத்தை கொண்டு வந்தவனை
நிற்க்க வைத்து சுடத்தோன்றும்
அவள் வியர்வை துளிகளைக் கண்டால்..
என் வெற்றுக் கதைகளைக் கேட்க
உன்னை விட சிறந்த தோழி
உலகில் எவரும் இல்லை ..

பருவ வயதில் ,அரும்பு மீசை முளைத்த காலத்தில்
காதல் போதையில் ,பருவ நெருப்பில் ,
நண்பர்களின் களிப்பில் ,
ஆயிரம் தவறுகள் செய்த போதும் ,
ஊர் என்னை ஏசியபோதும் ,
"சாப்பிட்டியாடா" என்னும் ஒரு சொல்
மற்றவற்றை கொன்று விடும்..

அலுவுலகம் செல்லும் வயதில் ,
என் உலகமே அலுவுலகமாய் இருக்க
உன் அலுவலே எனக்காய் காத்திருப்பதாய் கொண்டாய்..

இன்றுஉலகம் அறிந்த வயதில் ,
நிலவுண்டு,
சோறுண்டு ,
தாய் இல்லை ..
100 வகை உணவு வகைகளில் ,
1000 ரூபாய்களில் உள்ள ருசி ,
உன் ஒரு பிடி சோற்றுக்கு ஈடாகாது..
ஏனென்றால்
ருசியோடு பாசத்தையும் சேர்த்து
பிசைந்து தரும் வரம் தாய் ஒருத்திக்கு மட்டுமே..

உற்றம் பேச்சைக்கேட்டு
முற்றும் இழந்த
ஓர் மகனுக்காய் ,
எதோ ஓர் முதியோர் இல்லத்தில்
எனக்காய் உருகும்
என் தாய்
உலகில் சிறந்தவள்..

காதல் வந்துவிட்டது..

ரெட்டை ஜடை போடதே
என் ரெட்டை விழிகள்
உன்னை விட்டு விலக மறுக்கிறது..

ஏ மல்லிகை தோட்டத்து சொந்தக்காரி
உன் தோட்டத்து பூக்கள் அழகாய் பூப்பதன் காரணம் கண்டேன்..
அவை தினமும் சிரிக்க பழகி கொள்கின்றன
உன்னைக் கண்டு..

உன் மூச்சுக் காற்று ஒன்று போதும்
ஐஸ் கட்டிக்கும் ஜலதோஷம் பிடிக்கும்..

நீ
பூக்கள்,
மழை என எதன் மேலும் நேசம் வைக்காதே!!
உன்னை விட அவைகள் அழகெனகர்வம் கொள்கிறது பார்!!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்!!
உண்மைதான்..
இல்லையென்றால் என் முறை பெண்கள் மேல் வராத காதல்
உன் மேல் வந்திருக்காது..

நீ என்ன நூலகமா??
உன்னைப் படித்து படித்துஎன் கவித்திறனை வளர்த்துக்கொள்கிறேன்??

அடடே உன் கவிதை அருமை!!
நீ அடித்தல் திருத்தலுடன் எழுதி
கசக்கி எரிந்த தமிழ் கட்டுரையை தான் சொல்கிறேன்..

ஆயுள் முழுதும் நான் ஓர் மாணவனே
உன் கண்களைப்படித்துக்கொண்டே!!

தயவு செய்து உன் வீட்டு சமையல் கரண்டியில் நீ ருசி பார்க்காதே!!
பிறகு எல்லா உணவும் இனிப்பு பலகாரமாய்மாறி விடப் போகிறது!

ஒரு நாள் நீ
உள்ளிருந்து மழையை ரசித்துக்கொண்டிருந்தாய்..
வெளியிலிருந்து மழை உன்னை ரசித்துக்கொண்டிருந்தது..

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த பூக்களை பழி தீர்க்க துடிக்கிறேன்..
உன் கூந்தலை முத்தமிட என்ன துணிவு பார்த்தாயா??

உன்னை மேலும் கீழும் உற்றுப்பார்க்கிறேன்
என கோபம் கொள்ளாதே..
சுடிதார் அணியும் நவயுக தேவதையை
இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்..

புது யுகம் படைப்போம்..

ஆண்டாண்டுகளாய் ஓடிய
மாசு படிந்த நீரோடை போதும்..
இனி புது நீர் பாய்ச்சுவோம்..

காலப்போரில் சமரச பேச்சிற்க்கு அமர்வது போதும்..
இனி நெஞ்சுயர்த்தி போருக்கு தயாராவோம் வா..

நாட்டின் விதி எழுதும் தாள் இருந்தால் தாருங்கள்..அ
டித்தல் திருத்தலுடன் நீங்கள் எழுதிய விதியை ,
அடி வேர் வரை
மாற்றி,
திருத்திக்
காட்டுகிறோம்..

பள்ளி ஏட்டில் படித்த
"அச்சம் தவிர்"இன்னமும் அவ்வேட்டிலேயே
ஒடுங்கி கிடக்கின்றன..
அதை செயல் முறையில் கற்று தரும்
யுகம் படைப்போம் வா..

காலச்சக்கரத்தில்
நிமிட முள்ளாய் இருந்தது போதும்..
வினாடி முள்ளாய் விரைவோம் வா..

இல்லை என்ற சொல்லை ,அகராதியிலிருந்து எறிவோம்..
இனி உண்மைக்கு மட்டுமே விலை போவோம்..
விடுமுறையை கொண்டாட நிலவிற்க்குச் செல்வோம்..

"எதிர்கால இந்தியா"என ஆயிரம் ஆண்டுகளாய்
காண்கின்ற கனவை ,
நாமாவது நனவாக்குவோம்..

கை ஏந்தி நின்றது போதும்..
இனி கை கொடுத்து உத கற்றுக்கொள்வோம் வா..

அனுபவங்களை துணைக்கு அழைத்துக் கொள்வோம்..
அறிவுத்திறனை செயல் முன் வைப்போம்..
புதிய முயற்சிகளுக்கு தோள் கொடுப்போம்..
வாருங்கள் புது யுகம் படைப்போம்..