Saturday, March 3, 2007

பேருந்து தேவதை..

1.
நள்ளிரவு 12:00 மணி..!
மனைவியின் முதல் பிரசவ வேதனையை
காதில் கேட்டுக் கொண்டு நிற்க்கின்ற
கணவனைப் போல..

இந்த வருடமேனும் வான்மழை
பூமிப்பந்தை முத்தமிடாதா?
என ஏங்கும்விவசாயி போல..

இதழ்களுக்கும் சுவாசக் குழலுக்கும் உள்ள இடைவெளியில்
காம்பு முடி முளைக்காதா?எனக் காத்திருக்கும்
பாலகனைப் போல..

தாயின் நிழல் கருவிழிகளுக்கு எட்டாதா?
எனபசியில் இருக்கும் குழந்தைஅழுவது போல..

கிடந்தேன்..!கிடந்தேன்..!

உடலை பூமியிலும்உள்ளத்தை நிலவிலும்
தடம் பதித்து கிடந்தேன்..!
ஆம் நாளை காலை என்னவள்
பதில் கூறப் போகிறாள்..
நான் காகிதத்தில் கொடுத்த என்
இதயத்திற்கு..

மறுநாள்:
விடிந்தது..!
ஏனோ காக்காய்,குருவிகளுக்கும்
என்னவளின் முடிவு கேட்கும் ஆர்வத்தில்
வேகமாய் துயில் எழுந்ததாய் தோன்றியது..

முக்கால் சொம்பு தண்ணீரில்
நனைந்தும் நனையாமலும்
குளித்து முடித்தேன்..

தாயின் அரை கோப்பைத் தேனீரின்
அன்பையும் உதாசினப்படுத்தி
வீதியை நோக்கி 100 மைல்
வேகத்தில் செல்ல முனைந்தேன்..!

வீதியில்..!!
அழையா விருந்தாளி போல்
நண்பன்..
சில்லென்று சிதறியது
என் பாதங்கள் வேறு பாதை நோக்கி..

ஒரு வழியாக பூலோகச் சொர்கத்தை அடைந்தேன்..
ஆம்..அது தான் நான் அவளை தினமும்
சந்திக்கும் பேருந்து நிலையம்..!

என் கடிகாரம் அன்ன நடை இடுவதை
வருத்ததோடு நோக்கிக் கொண்டு இருந்தேன்..

இதோ காலைப் பொழுதில் மொட்டு
விரிவதைப் போல் என் சிற்பம் மெல்ல
மெல்ல நடந்து வந்துகொண்டிருக்கிறது..

2.
முதல் நாள்..

நேரமாகியும் வராத
பேருந்தை திட்டியபடி
திரும்பியது என் பார்வை எதிர் திசை நோக்கி..!

இன்று பகலில் பவுர்னமி போலும்..
பிரகாசமாய் இருந்தது அவள் வரும் திசை..

இதயம் பதை பதைத்தது..
அவள் நான் நிற்கும் பேருந்து நிலையம்
நோக்கி மிதந்து வருகிறாள்..

இதயம் அவள் நடை அசைவிற்க்கு
எற்றாற் போல் தபேலா வாசித்தது..

திட்டிய என் இதழ்கள் வேண்டியது..
ஓடுனர் கடவுளாக..!நான் பக்தனாக..!
இன்று முதல் இப்பேருந்துதாமதமாகவே வர வேண்டும் என்பது என் வேண்டுதலாக..!

யார் இவள்??
விண்ணிலிருந்து விழுந்த நட்ச்சத்திரமோ??
அல்ல நிலவின் ஒரு துண்டோ??
தெரியவில்லை..
ஒன்று மட்டும் விளங்கியது..
இவள் பிரம்மனை ஏழையாக்கி பிறந்திருக்கிறாள்..

அவளென்னும் நிலவில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்..
அவள் சிரித்தாள்..
என் இதயம் சிதறியது..
சிதறிய துண்டுகளை சேகரிப்பதற்க்குள்என் உயிரைப் பிரியும் தருணம் வந்து விட்டது..
ஆம்..
நான் ஏற வேண்டிய பேருந்து கண்ணில் பட்டது..

[தொடரும்..]

3.
கணப் பொழுதில் என் காதலை
என் இதயத்திலிருந்து வேரோடு
பிடுங்கி விட்டதாய் ஒரு எண்ணம்..!!
அட!! எப்போது என் இதயத்தில்
"காதல்" என்னும் வார்த்தை வேரிட்டது??
ஓ..!!இது தான் கண்டதும் காதலோ?

பண்டமாற்று முறை நடந்து
கொண்டிருக்கையில் இடையூரு செய்தான் கண்டக்டர்
"வேகமாய் இறங்குங்கள்" என குரல் எழுப்பி..
ஆம்..பண்டமாற்று முறையே!!
என் இதயத்தை கொடுத்து விட்டேன்..
அவள் காதலை மாற்றாய் பெற காத்திருகின்றேன்..

சற்றும் சலனமில்லாமல்
என்னைக் கடந்து சென்றாள்..!
நீ கடக்கையில் உன் அழகு
என்னை வீழ்த்திவிட்டதாய்
கேலி செய்வதைப் போல் தோன்றியது..!

பூக்கள் மொத்தமும்
ஊர்வலம் போவதை இன்று தான் கண்டேன்..


நான் மீண்டும் மீண்டும் வீழ்வதில்
ஆண்டவனுக்கும் விருப்பம் போலும்..!
ஆம் அவளும் என் பேருந்து ஏறினாள்..


4.

வீழ்வதிலும் இன்பம் தான்..!
வீழ்வது உன் அழகில் தானே..
என்ன காயங்கள் மட்டும் என் இதய்த்திற்க்கு..

அவள் இசைத்த முதல் இசை
"இந்த பஸ் பீச் ரோடு போகுமா?"
அது தான் என் காதில் அன்று ஒலித்த கடைசி ஒலி!!


வேடந்தாங்கல் விருந்தாளி, ஊர்
செல்வதைப் போல் இறங்கிச்
சென்றது என் பறவை
அவள் நிறுத்தம் வந்ததும்..!!

அன்று என் பணிமுடித்து
திரும்புகையில் ரசித்தேன்..
தேன் உறிஞ்சும் பூக்களை!!
மழலையின் சிரிப்பை!!
தென்றலை!!
இசையை!!
குழாய் அடி சண்டையும்
குழல் ஊதுவதாய் ஒலித்தது என் காதில்!!

இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்??
கேட்டது மனம்..!!
இவைகள் காதலியோடு வந்த
இலவச இணைப்பா??
அவைகள் சொன்னது
"வாழ்வை ரசிக்க தெரிந்தவனுக்கு
கயிற்றுக் கட்டிலும் பஞ்சு மெத்தையே..
ஒரு செம்பு கூழும் கோழி குழம்பே..
இன்று தான் நீ ரசிக்க தொடங்கியிருக்கிறாய்.."
ஆக என்னை ரசிக்க வைத்தவளும் அவள் தானோ??

இது காதலா??இல்லை காமமா??
காமம் என்றால் என் கண்கள் அவளை கற்பப்ழிப்பு தானே செய்திருக்கும்??
ஆனால் இல்லையேநான் அவளை தரிசிக்கத் தானே செய்தேன்??
[தொடரும்]

5.

இரவில்..
இரயில் பயணத்தில் பின்னோக்கி
செல்லும் மரங்களைப் போல
பின்னோக்கி பயணம் செய்து
கொண்டிருந்தேன் காலப் பயணத்தில்
அவள் கண்களை மீண்டும் காண..

உன்னிடம் கேட்கவில்லை
நீ என்னிடம் களவாண்ட
நிமிடங்களை திருப்பி தா??என
மீண்டும் எப்போது களவாடுவாய்?? எனவே கேட்கின்றேன்..

மறுநாள்..
காதல் தேவன் உரசிச்
சென்றதில் கவிதையும் பிறந்தது..
"வலப் புள்ளி நான்..
இடப் புள்ளி நீ..
காதல் என்னும் மூன்றாம் புள்ளியில்
முழுமையடைந்தது நம் எழுத்து..
இது ஆய்த எழுத்து அல்ல..
நம் உயிர் எழுதிய உயிர் எழுத்து..

"தேவதை ரதத்தில்
ஊர்வலம் செய்வதை
காணக் காத்திருக்கும் பக்தனை போலவே
தினமும் நம் பூலோக சொர்கத்தை வந்தடைகிறேன் வேகமாய்..

இப்படியே தினமும் பூக்கின்றேன்..
என்றோ ஒரு நாள்
நீ தேன் உறிஞ்ச வருவாய் என..
கொடுத்து வாழ்வதில் இன்பம் தான்
என்னும் தத்துவத்தில் சங்கமிக்க..

இதயத்தின் கனம்கூடி விட்டது..
உன்னுடய காதலையும்
சேர்த்து சுமக்கிறேன் அல்லவா??

6.

என் நாட்காட்டியில் மொத்தம்
261 நாட்காளே..
சனியும்,ஞாயிறும் நாடு கடத்தப்பட்டனர்
என் நாட்காட்டியில்..

என்னுடன் வா..
இருவரும் சேர்ந்து ஒரு ஆயுளை பகிர்வோம்..

சூரியன்க்கும்,சந்திரனுக்கும் இடையில்
ஊஞ்சல் கட்டி
உல்லசமாய் கழிப்போம் நம் பொழுதை..

ஒரே கோப்பையில்
தேனீர் அருந்துவோம்..
ஒரு வாய் நீ..
ஒரு வாய் நான்..
இருவரது எச்சிலும் கலக்கட்டும்..
அளவுக்கு மிஞ்சி அமிர்தம் உண்டு
காதல் கடலில் மூழ்கி இறப்போம்..

அடை காப்பேன் உன்னை..
நிலாச் சோறு ஊட்டுவேன்..
நீ சினுங்குகையில் முத்தங்கள் கொடுப்பேன் லஞ்சமாய்..
உன் தாயிர்க்குப் பிறகு
மீண்டும் உன்னை சுமக்க விரும்புகிறேன் ஒரு தாயாக..

என் பாதையில்
மைல் கல் அல்ல நீ..
நான் செல்லும் பாதை நீ..

அனைத்தையும் சொல்ல நினைக்கிறது மனம்..
ஆனால் உன்னைக் காண்கையில்
சொற்கள் அனைத்தும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஒளிந்து கொள்கிறது..
என்னையும் கொல்கிறது..

இப்போதைக்கு என் கண்கள் மட்டுமே என் மொழியாய்..
நாளை கண்டிப்பாய் உன்னிடம் பேசி விடுவேன் என்பது என் நம்பிக்கையாய்..

No comments: