Sunday, July 15, 2007

நிலாச் சோறு

அறியா வயதில் ,
அன்னை மொழி மட்டும் விளங்கும்
பருவத்தில் ,
மாதக்கணக்கில் வயிற்றில் சுமந்தவள் ,
இறக்க மனமில்லாமல் ,
வருடங்களாய் இடுப்பில் சுமந்த காலத்தில் ,
இரவு நிலவை ,பொம்மை பொருளாய்க் காட்டி ,
சோறு ஊட்டுவாள் ..

அவள் சொல்லும்
பாட்டி வடை சுட்ட கதையும் ,
நிலா கதையும் ,
பூச்சாண்டி கதையும் அன்று எனக்கு
ராமயணம் ,மகாபாரதம்..

விடிந்த பொழுதில்
நிலவில்லையேல்
ஊண் உண்ண மறுக்கும் என்னை
சமாதானப்படுத்தும் பொறுமை
கடலுடன் போட்டி போடும் ..

முகம் அறிந்த வயதில் ,
வழிந்தோடும் உறக்கத்தை
மெல்ல விலக்கி விட்டு ,
காலை நேர அலாரமாய் ஒரு முத்தம் தந்து என்னை எழுப்புவாய்..

உன் முகம் மறையும் தருணத்தில்
வெளியேரும் கண்ணீரை
கையில் ஏந்தி ,
"அம்மா மதியம் சாப்பாடு கொண்டு வரேன் டா" என
வார்த்தை கைக்குட்டையை கொடுப்பாய்..

எனக்க்காய் நட்ட நடு வெயிலில்
சாப்பாட்டுக் கூடையுடன்
காத்து நிற்ப்பாய்..
மதிய வேளையில் தான் உணவு உண்ண வேண்டும் என்னும்
பழக்கத்தை கொண்டு வந்தவனை
நிற்க்க வைத்து சுடத்தோன்றும்
அவள் வியர்வை துளிகளைக் கண்டால்..
என் வெற்றுக் கதைகளைக் கேட்க
உன்னை விட சிறந்த தோழி
உலகில் எவரும் இல்லை ..

பருவ வயதில் ,அரும்பு மீசை முளைத்த காலத்தில்
காதல் போதையில் ,பருவ நெருப்பில் ,
நண்பர்களின் களிப்பில் ,
ஆயிரம் தவறுகள் செய்த போதும் ,
ஊர் என்னை ஏசியபோதும் ,
"சாப்பிட்டியாடா" என்னும் ஒரு சொல்
மற்றவற்றை கொன்று விடும்..

அலுவுலகம் செல்லும் வயதில் ,
என் உலகமே அலுவுலகமாய் இருக்க
உன் அலுவலே எனக்காய் காத்திருப்பதாய் கொண்டாய்..

இன்றுஉலகம் அறிந்த வயதில் ,
நிலவுண்டு,
சோறுண்டு ,
தாய் இல்லை ..
100 வகை உணவு வகைகளில் ,
1000 ரூபாய்களில் உள்ள ருசி ,
உன் ஒரு பிடி சோற்றுக்கு ஈடாகாது..
ஏனென்றால்
ருசியோடு பாசத்தையும் சேர்த்து
பிசைந்து தரும் வரம் தாய் ஒருத்திக்கு மட்டுமே..

உற்றம் பேச்சைக்கேட்டு
முற்றும் இழந்த
ஓர் மகனுக்காய் ,
எதோ ஓர் முதியோர் இல்லத்தில்
எனக்காய் உருகும்
என் தாய்
உலகில் சிறந்தவள்..

No comments: