Thursday, August 19, 2010

ஊமைக்காயங்கள்

உதிர்ந்த சருகின் மரண வாக்குமூலமாய்,
அதன் மேல் எழுதியிருந்த மழை நீர்..
மேகத்திரை என்னும் போர்வை விலக்கி,
மெல்ல எழுகின்றது அந்த ஒற்றை சூரியன்...

உயிரற்ற அந்த இரும்பு கம்பிகளின் பின்னால்,
உயிர் தாங்கி நின்றுக்கொண்டிருந்தது அந்த உடல்..
மனத்திற்க்கும்,சொற்களுக்கும் உள்ள அந்த மெல்லிய இடைவெளியில்,
அங்கும் இங்கும் நடை போட்டுக் கொண்டிருந்தது அவனது எண்ணங்கள்..

பறிக்கப்பட்ட வேதனையில் கதறும் அந்த மெல்லிய மலரின்
விரல் பற்றி நிற்கிறான் அவன்..
அமிலம் சுரக்கும் வாகனங்களிடையே,
எதையோ அவன் தேடிக்கொண்டிருந்தான்..
மேடு பள்ளமான அந்த சாலையில்,
சிதறாது பயணித்து கொண்டிருந்தது அவனது பார்வை..

சிறிது நேரத்தில்,காயப்பட்ட பந்து ஒன்று,
மூச்சிறைக்க அவன் கால்களிடையே தஞ்சம் அடைந்தது..

அதனை துரத்தி வந்த ஒர் சிறுவன்,
"டேய் நீ விளையாட வர்லயா?" என்றான்,
"இல்ல டா,இன்னிக்கி என் அம்மா வந்துடும்னு நேத்து ராத்திரி தூங்கறப்ப ஆயா சொல்லிச்சு.அதான் பாக்குறேன்" என
ஆங்காங்கே ஒளிந்திருக்கும்,நம்பிக்கை துகள்களை,
சேர்த்துத் துடைத்து அவன் கண்களில் தைத்திருந்தான்..

மீண்டும் அந்த பந்து உதைக்கப்பட்டது..
மீண்டும் அந்த பார்வை பயணப்பட்டது..

அதோ அங்கே ரோட்டோரத்தில் தெரிகின்றது ,
காயங்கள் தாங்கிய ஓர் புதிய உயிர் பந்து..
அவன் வளர்கையில்,அவனிடம் எதைக் கொடுப்பது?
உண்மைகள் வீசும் போர்வாளையா அல்லது
இவைகளைப் போல் பொய்கள் தரும் ஊமைக்காயங்களையா??

No comments: